Monday, September 29, 2008

வண்ணதாசனின் "நடுகை" - சிறுகதை தொகுப்பு

வண்ணதாசனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு -"நடுகை" படிக்க கிடைத்தது.இத்தொகுதியில் அமைந்த பெரும்பாலான கதைகள் மனித உறவுகளின் பாசாங்கற்ற இனிமையை சொல்லுபவை.சக மனிதர்களோடு முகம் கொடுத்து,நின்று பேச நேரம் இல்லாமல் இயந்திர ஓட்டத்தில் அடித்து செல்லப்படும் இன்றைய பொழுதில் இக்கதைகள் படிப்பதற்கு பெரும் ஆறுதலாய் உள்ளது.

* காற்றின் வெளி-- ஒரு காலை பொழுதில் தன் மகளோடு சென்ற நடைபயணம் குறித்த பதிவு இது.வாகன பயணத்தை விட நடை பயணம் சுவாரசியமானவை..நான் மிக நெருக்கமானதாய் உணர்த்த கதை இது.கடை வீதிகளுக்கு செல்லும் பொழுதோ,சாலையை கடக்கும் பொழுதோ அப்பாவின் கைகோர்த்து செல்வது மிகுந்த விருப்பதிர்க்குறிய ஒன்று.சொல்லில் உணர்த்த முடியாத அன்பின் வெளிப்பாடாய் அக்கணங்கள் தோன்றும்.சிறுமியான தன் மகளின் வியத்தகு கேள்விகளும்,பார்பவர்களிடத்தில் எல்லாம் சிரித்து பேசும் குணமும்,குழந்தைகளுக்கே உண்டான ஆச்சர்யங்களும்,கேலிகளும் ஒரு தந்தையின் பார்வையில் சொல்லி இருப்பது நன்று.பால்ய காலந்தின் மீதான ஏக்கத்தை அதிகரிக்க செய்யும் விவரிப்புகள் அருமை.




* ஜோதியும் நானும் அந்த பையனும் - காதலிக்கு கொலுசு வாங்க கனவுகள் சுமந்து கடைக்கு செல்லும் நாயகன் அங்கு வறுமையின் காரணமாய் தான் வாங்கிய பரிசு கோப்பைகளை விற்று பணம் பெற கெஞ்சும் இளைஞனை கண்டு தான் வந்த காரியம் அற்பமானது என்பதை உணர்கிறான்...மனதை கனக்க செய்யும் இக்கதை உள்ளார்ந்த அர்த்தம் கொண்டது.

* மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது - வண்ணநிலவனின் மற்றுமொரு சிறுகதையான "கடைசியாய் தெரிந்தவர்கள்" போலவே இதுவும்,மன உளைச்சல் கொண்டு பரிதவிக்கும் நண்பனுக்கு ஆறுதலாய் உடன் இருந்து உதவிய கணங்களின் பதிவு.உறவுகள் மேம்படுவது கேளிக்கையான தருணங்களை காட்டிலும் துன்ப காலங்களிலேயே...

* நடுகை - நாமே எதிர்பாரா வண்ணம் சில அபூர்வ மனிதர்களை காண நேரிடும்.படிப்பு,வளர்ப்பு என்பதை உலக ஞானம் பெற்று அவர்கள் கூறுபவை யாவும் நிதர்சனங்களாய் ஒலிக்கும்.பயிர் செடிகளின் மீது பிரியம் கொண்ட மாடு மேய்க்கும் கிழவரூடான சம்பாஷனைகளே இச்சிறுகதை.


இச்சிறுகதை தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையே ஒரு அழகிய சிறுகதையை போன்றது."இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது" என கூறுகிறார்.இன்றைய பொழுதுகளின் இறுக்கத்தில் இருந்து விடுபட நினைவுகளின் பகிர்தல் மிக அவசியமானதே!!

வெளியீடு - அன்னம் புக்ஸ்
விலை - 45 ரூபாய்

Friday, September 26, 2008

அனிதா தேசாயின் "கடல்புறத்து கிராமம்" - ஒரு இந்திய குடும்பத்தின் கதை

ஆரம்ப கால இலக்கிய வாசிப்புகளை எளிதில் மறக்க முடியாது.சிறுவர் இலக்கியம் படிக்க ஆவல் மேலிட தேடிய பொழுது முதல் பக்கத்தில் என் ஒன்பதாம் வகுப்பு கிறுக்கல்களோடு இப்புத்தகம் கிடைத்தது."ஈசாப் நீதி கதைகள்","பிஞ்சுகள்","டின்கில்","அக்பர் அண்ட் பீர்பால்",தெனாலிராமன்","டாம் சாயேர்" ஆகிய நூல்களை இப்பொழுது பார்த்தாலும் எனது பால்யம் திரும்பி வந்ததாகவே உணர்வேன்.குழந்தைகளுக்கு என பல புதினங்கள் எழுதிய அனிதா தேசாயின் அற்புத படைப்பு "கடல்புறத்து கிராமம்".




படிப்பறிவில்லாத ஹரிக்கு வேலை செய்ய உகந்தது என தெரிவது மூன்று வழிகள்.ஊரில் புதிதாய் வரபோகும் ரசாயன ஆலை,அவ்வூரின் பெரும் பணக்காரனான பிஜ்ஜுவின் மீன் பிடி கப்பலில்,மும்பை சென்று பிழைத்து கொள்வது.முதல் இரண்டு வழிகளில் நம்பிக்கை இழந்து மும்பை சென்று பிழைக்க எண்ணி கப்பல் ஏறுகிறான். கிராமத்து சிறுவனான ஹரிக்கு மும்பை நகரின் ராட்சச பிரம்மாண்டம்,ஓயாத மக்கள் நடமாட்டம்,இயந்திர நடவடிக்கைகள் ஆச்சர்யத்தை தருகின்றது..அப்பெரு நகரிலும் ஹரிக்கு உதவ ரோட்டு உணவு கடை முதலாளி முன் வந்து அவரோடு அவனை வைத்து கொள்கிறார்.

மெல்ல நிறைவேறி வரும் தன் கனவுகளை எண்ணி வியப்பும் பெரிமிதமும் கொண்டு இருக்கும் வேளையில் ஹரிக்கு அவன் பனி செய்யும் உணவு கடையின் அருகில் கடிகார பழுது கடை நடத்தும் கிழவர் ஒருவரோடு நட்பு உண்டாகிறது.பகல் பொழுதுகளில் அவரோடு அமர்ந்து கடிகாரம் பழுது செய்ய கற்று கொள்கிறான்.நாட்கள் செல்ல செல்ல தொழில் தேர்ச்சி உடன் உலக ஞானமும் பெற்று நிறைவான பணத்தோடு வீடு திரும்புகிறான்.இதனிடையில் அவன் சகோதரிகள் தம் வீட்டருகே உள்ள பங்களாவில் வேலை செய்தும்,அவ்வீட்டரின் உதவியோடு தாயை மருத்துவமனையில் சேர்த்து குணமாக்குகின்றனர்.அவன் தாயின் நிலை கருதி தந்தையும் திருந்துகிறார்.




மேலோட்டமாக பார்த்தால் பட்டணம் சென்று பணம் சம்பாதித்து திரும்பும் கிராமத்து சிறுவனின் கதையாய் தோன்றும். குடும்பம் குறித்த அவனது சிறு வயது கடமைகளும்,கனவுகளும்..எட்டா கனியான விஷயங்கள் குறித்த அவனது பார்வைகள் விரிவாய் சொல்ல பட்டுள்ளது.ஹரியின் மூத்த சகோதரி லைலாவின் பாத்திர வடிவமைப்பு மிக நேர்த்தியானது,சிறு வயதில் குடும்ப நிலை அறிந்து தம் விருப்பங்களை விடுத்து உழலும் பல பெண்களின் குறியீடு.தென்னை மரங்களும்,கடல்கரை இரவுகளும் தந்த மகிழ்ச்சியை தொலைத்து மும்பை செல்லும் ஹரியின் பார்வையில் அந்நகரம் விவரிக்கப்படும் இடம் அற்புதம்.

மிக நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் சிறுவர்கள் அவசியம் படிக்க வேண்டியது.வறுமையின் கொடுமைகளை பாரம் என கருதாது எப்படியேனும் பிழைத்து முன்னேற துடிக்கும் ஹரியின் கதை மிக்க நம்பிக்கை தரவல்லது.மொழிபெயர்ப்பில் எந்த வித இடறலும் இல்லாதது பெரும் ஆறுதல்.பிரிட்டன் அரசு இந்நாவலுக்கு இலக்கிய விருது அளித்துள்ளது.

வெளியீடு :நேஷனல் புக் டிரஸ்ட்
விலை : 22 ரூபாய்

Wednesday, September 24, 2008

ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" - கலைக்க முடியாத ஒப்பனைகளின் பதிவு!!

ஆதவனின் எழுத்துக்களோடு அவ்வளவு பரிட்சயம் இல்லாதிருந்தேன்.நண்பர்கள் வாயிலாக அவரின் "காகித மலர்கள்" மற்றும் "என் பெயர் ராமசேஷன்" நாவல்கள் குறித்து அறிந்து, நீண்ட தேடலுக்கு பிறகு லாண்ட்மார்க்கில் ஒரு வழியாய் இந்நாவல் வாங்க முடிந்தது.பல ஆண்டுகளுக்கு முன் வந்த இந்நாவலை உயிர்மை பதிப்பகம் மறு பிரசுரம் செய்துள்ளது.

கதை நாயகன் ராமசேஷன்.இளைஞன்.சராசரிக்கும் மேலான சிந்தனை கொண்டவன்.அவன் வாயிலாக அவன் சந்தித்த மனிதர்கள் அவர்களோடான உரையாடல்,விவாதங்கள்,அவர்களின் போலியான பேச்சு,காதல்,நட்பு என சகலத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறான்.போலியான முகங்களினூடே நிஜ முகம் முகம் தேடி அலையும் ராம் சந்தித்த மனிதர்களை விவரிக்க சுலுவாக பெண்கள்,பெரியவர்கள்,நண்பர்கள் என பிரிக்கலாம் .




பெண்கள் - வீட்டினுள் அடைந்து கிடக்கும் பெண்களின் கவனமும்,சிரத்தையும்யார் மீது தன் ஆளுமையை செலுத்தலாம் என்பதிலேயே இருக்கும்,மாமியார்கள் மருமகள்கள் மீதும்,அவர்கள் தம் பிள்ளைகள் மீதும் தொடர் சங்கிலி என கட்டவிழ்க்கும் ஆளுமை - பரிவு,பாசம்,கடமை,கண்டிப்பு என பெயர் மாறி தொடர்வதை சொல்லி இருப்பது சற்று மிகை என தோன்றலாம்,அதனூடாக ஆழ்ந்து நோக்கினால் அது எவ்வளவு உண்மை என புலப்படும்.தனது பாட்டி,தாய்,அதை ஆகியோரே குறித்த ராமின் கருதும் இதை வலியுறுத்துவதே.

காதலா நட்பா என குழப்பி கொள்ளும் வயதில் ராம் சந்திக்கும் இரு பெண்கள் மாலா மற்றும் பிரேமா.வளர்ப்பில் செழுமை,நுனி நாக்கு ஆங்கிலம்,நாகரீக உடையலங்காரம் என தோன்றும் மாலாவின் மாய தோற்றம் குறித்தும்,அவளின் செய்கைகளை வர்ணிக்கும் இடங்கள் நகைப்பை உண்டு பண்ணினாலும்,முகத்தோடு சேர்த்து நடை,உடை,பாவனை,பேச்சிலும் ஒப்பனை ஏற்றி வலம் வரும் இக்கால பெண்கள் பலருக்கும் பொருந்தும் வேதனைக்குரிய நிகழ்வே.கவர்ச்சி தோற்றம் அற்று அதீத சிந்தனை கொண்டு எளிமையாய் தோன்றும் பிரேமா கல்லூரி சுற்றதால் "ஏஞ்சல்" ஆக்கபடுகிறாள்.இவ்விரு பெண்களின் மேம்போக்கான மாயைகளை விளக்கி நிஜம் அறிய முயன்று தோல்வியுறுகிறான் ராம்.



பெரியவர்கள் - ராமின் தந்தை,தாயை பேணி,மனைவிக்கு அடங்கி,குழந்தைகளின் விருப்பத்தை நிறைவு செய்து,இயற்கையோடு பேரன்பு கொண்டு,சக மனிதர்களின் போலி வேஷங்களை அமைதியாய் வேடிக்கை பார்த்து,பிறிதொரு நாள் யாரும் அறியாது வீட்டை விட்டு வெளியேறுகிறார்.ராமின் வெறுப்பிற்குரிய நபராய் முதலில் சித்தரிக்கபடுபவர்,இறுதியில் அவன் தேடிய நிஜ முக மனிதராய் தோன்றுகிறார்.சமூகத்திற்கென சந்தோஷ நிலை முகமூடி அணித்து திரியும் ராமின் பெரியப்பா,எதிலும் எப்பொழுதும் மாற்று கருத்து கொண்டு வாதம் புரியும் ராமாமிர்தம்,மாணவர்களை பகடையாக்கி மகிழ்வுறும் பேராசிரியர் என ஒவ்வொருவரும் தன் இயல்பை மறைத்து பொருந்தா வேடம் தரித்து மற்றவர்களை ஈர்க்க படும்பாடு ஹாசியம் கலந்து சொல்ல படுகின்றது ராமின் வாயிலாக.

நண்பர்கள் - ராமின் அறை தோழன் ராவ்,பணம் படைத்த ராவின் நடப்பை தக்க வைத்து கொள்ள எப்பொழுதும் அவனுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் இருக்கும் மூர்த்தி.ராவின் பலவீனங்கள் மூர்த்திக்கு பலம்,மூர்த்தியின் பலவீனங்கள் ராமிற்கு பலம்.உன்னை விட நான் உசத்தி என காட்டி கொள்ள பிறரின் பலவீனங்களை ஆராயும் நண்பர்கள்.

மனிதர்களுக்கு ஏற்ப,இடத்திற்கு ஏற்ப,சந்தர்பங்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி முகமூடி அணிந்து ஆடும் நாடகம் சோர்வின்றி தொடர்கின்றது நம்மிடையே.இந்நாவலின் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை இனம் கண்டு கொள்ளலாம்.அதை நம்ப மறுக்கும் முகமூடியும் நம்மிடம் உண்டு.நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை எளிமையான நடை,நாயகனோடு நேரடி உரையாடல் கொள்வது போன்ற உணர்வு, மிகுந்து நிற்கும் பகடி,சிறப்பான ஒப்புமைகள்.ஒரு மோசமான திரைப்படம் குறித்த ராமின் ஒப்புமை 'பைத்தியகாரனின் கனவு போல" ,எந்த காலத்திற்கும் பொருந்தி போகும் கதையாடல்.நாவலில் அதிகம் காணப்படும் வார்த்தை "இண்டலச்சுவல்" - ஒப்பனைகள் கலைக்க படாமல் தொடர்வது இதன் பொருட்டே!!

ஆதவனின் மற்றும் ஒரு நாவலான "காகித மலர்கள்" படிக்க பெரும் தூண்டுதளாய் இந்நாவல் அமைந்துவிட்டது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை : 120 ரூபாய்

Wednesday, September 17, 2008

ருத்ரைய்யாவின் “அவள் அப்படிதான்” - ஒரு மாற்று திரை முயற்சி

இதுவரை நான் பார்த்த சிறந்த படங்கள் யாவும்,அப்படங்களை குறித்து முதலில் அறியாமலேயே பார்த்தவை.ஹிட்ச்காக்கின் "சைக்கோ", "அமெலியா", கிரிஷ் காசர்கோடின் "கடஷ்ரதா",அபர்னா செனின் "மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர்","செம்மீன்',ஆகிய பட வரிசையில் நான் பார்த்த இப்படமும் சேரும்.எதிர்பார்ப்பு ஏதும் இன்றி பார்க்க பட்ட இப்படங்கள் முழுதுமாய் ஆளுமை செய்வதை ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர முடிந்தது.நடுநிலை பார்வையாளனால் சிறந்த படம் என சொல்ல கூடிய வகையில் முழுமை பெற்ற படங்கள் இவை.

1970 களில் வெளிவந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு புதிய திரை முயற்சியாய் வெளிவந்தது "அவள் அப்படிதான்" . ருத்ரைய்யாவின் இயக்கத்தில் ஸ்ரீ பிரியா,கமல்ஹாசன்,ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இப்படம் பெண்ணின் உடல் குறித்த சமூக பார்வையை முன்னிறுத்தி சொல்லப்பட்டது. இயக்கம்,நடிப்பு,இசை,வசனம் எல்லா விதத்திலும் முழுமை பெற்ற இத்திரைப்படம் மஞ்சு என்னும் இளம்பெண்ணை சுற்றி நகர்கிறது.




தாயின் முறைகேடான நடத்தையால் மனபிறழ்வு கொண்டிருக்கும் மஞ்சு தான் சந்திக்கும் ஆண்கள் அவர்களின் ஆணாதிக்க மனோபாவம்,சிந்தனைகள் கண்டு தன்னை தலைகனம் கொண்டவளாய் வெளிகாட்டுகிறாள்.மஞ்சு சந்திக்கும் இரண்டு ஆண்கள், மஞ்சுவின் மனதறிந்து தோழனாய் இருந்து அவளை நேசிக்கும் பத்திரிக்கையாளன்,ஆணாதிக்க சிந்தனை கொண்டு பெண்களை துச்சமாய் என்னும் அவளின் அலுவலக உயர் அதிகாரி. இதில் பத்திரிக்கையாளனாய் கமலும்,உயர் அதிகாரியாக ரஜினியும் நடித்துள்ளனர்.கடந்த கால ஏமாற்றம் ஒன்றினால் நண்பனின் காதலை ஏற்க மனமின்றி தனியே வாழ்வை தொடர முடிவு செய்கிறாள் மஞ்சு.

காட்சிகள் மூலம் பாத்திரங்களின் எண்ணங்களை காட்டுவதை பெரிதும் தவிர்த்து பெரும்பாலான காட்சிகள் விவாதங்களின் வழியே செல்கிறது.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இளையராஜாவின் இசை மற்றும் வண்ணநிலவனின் வசனம்.பின்னணி இசையில் ராஜாவை மிஞ்ச யாரும் இல்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இத்திரைப்படம்."உறவுகள் தொடர்கதை" என தொடங்கும் பாடல் யேசுதாசின் குரலின் செவி வருடி செல்வது.வண்ணநிலவன் கடல் புறத்தில்,ரைநீஸ் ஐயர் தெரு ,எஸ்தர்,கம்பா நதி என சிறந்த இலக்கியம் படைத்த எழுத்தாளர்.மிக கூர்மையான/தெளிவான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம்.ஆங்கில நெடி அதிக கொண்டவை!

இத்திரைப்படம் ருத்ரைய்யா இயக்கிய முதல் படம்.பெரும்பாலோரால் சிறந்த படம் என அறியப்பட்டது.இவரின் அடுத்த படமான கிராமத்து அத்தியாயம் அவ்வளவு பேசப்படவில்லை,பெரும் எதிர் பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்தது.என் மட்டிலும் சிறந்த படம் என்பது ஒரு சிறந்த நாவலை போன்றது,படித்து முடித்து பல காலங்களுக்கு அதன் நிகழ்வுகளும்,மாந்தர்களும் நம்மோடு இருப்பதாய் உணர்த்துவது.அவ்வகையில் இப்படமும் எப்போதும் பேசப்பட முழு தகுதி கொண்டது!!

Thursday, September 11, 2008

ஜெயமோகனின் "ரப்பர்" -ஒரு தலைமுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும்

ஜெயமோகனின் எழுத்துக்கள் அவரது இணையத்தளம் மூலமாகவே பரிட்சயம்.அவரின் சிறுகதைகளை இலக்கிய இதழ்களில் படித்திருக்கின்றேன்.முற்றிலும் மாறுபட்ட மொழியாடல் கொண்டு வரும் அவரின் படைப்புக்களை இதுவரை படித்த வாய்ப்பு கிட்டாமல் இருந்து.ஒரு வழியாய் ஜெயமோகனின் முதல் நாவலான "ரப்பர்" படிக்க கிடைத்தது.

நாவலின் பெயரிலேயே இதன் கதை அடங்கி உள்ளது.அதிக நீரை உறிஞ்சி,நெடுக வளர்ந்து நிற்கும் ரப்பர் மரங்கள் ரப்பர் பாலிற்காக அறுபட்டு,பெரும் காயங்களோடு இறுதி காலத்தை கடப்பவை,அது போலவே வாழ் நாள் முழுதும் பிறரின் ரத்தத்தை உறிஞ்சி சுக வாழ்வு வாழ்ந்து தன் இறுதி நாட்களில் படுக்கையில் துன்பப்படும் பெரியவர் பொன்னு பெருவட்டரின் தலைமுறை பற்றிய கதை.




ஒரு கூட்டத்தாரின் சுயநலம் இல்லாது,பெரு முயற்சி கொண்ட உழைப்பின் பயனே ஒரு சமூகம் உருவாக காரணமாய் இருக்கும்.கிராமங்கள் உருவாகிய கதைகள் கேட்பதற்கு என்றும் இனிமை.கி.ரா வின் கோபல்ல கிராமம் அதற்கோர் இனிய எடுத்துகாட்டு.பொன்னு பெருவட்டரின் குழந்தை பிராயமும்,இளமை காலங்களும் விவரிக்கப்படும் பெரும் துன்பம் நிறைந்தவை.வாழ வழியின்றி பிழைப்பு தேடி வேறு ஊருக்கு செல்லும் பொன்னு பெருவட்டார் குடும்பம் அடிமை வாழ்கைக்கு பணிகிறது.தனது காலத்தில் பெரும் முதலாளி ஒருவரிடம் தரிசான கரடு நிலைத்தை இனாமாக பெற்று தம் கூட்டத்தாரோடு பெரும் முயற்சி கொண்டு அதை விளைநிலமாக மாற்றுகிறார்.பின்பு அந்நிலமே பெரும் ரப்பர் காடாக மாறி அவரை செல்வந்தர் ஆக்குகின்றது.

பொன்னு பெருவட்டரின் குணாதிசயங்கள் ஒரு முரட்டு முதலாளிக்கே உரியது.எப்பொழுதும் கோவம் கொண்டு,வேலையாட்களை துச்சமாக மதித்து,முடிந்த வரை தன்னிடம் வேலை செய்யும் கூலிகளை ஏமாற்றி செல்வம் சேர்கிறார்.தனது மூத்த மகனோடும் மருமகலோடும் இருக்கும் பெருவட்டார் தன் இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் நாட்களில் கதை நகர்கிறது.அவரின் கடந்த காலங்கள் யாவும் இடைஇடையே சொல்ல படுகின்றது.

பெருவட்டரின் மகன் அரசியல் மோசடியால் பெரும் தொகையை இழந்து,தனது ரப்பர் காடுகளை விற்கும் நிலைக்கு தள்ளபடுகிறார்,அவரின் மனைவி பெருவட்டதி ஆடம்பர மோகம் கொண்டு எதார்த்த வாழ்வில் நாட்டம் இன்றி திரியும் சராசரி பணம்படைத்த பெண்.பெருவட்டதியின் இளைமைகால வர்ணனைகள் அவளின் இப்பொழுதைய நிலைக்கு முக்கிய காரணமாய் சொல்லப்படுகின்றது.




பொன்னு பெருவட்டருக்கு இரண்டு பேரன்கள் லிவி மற்றும் திரேஸ்.பொறியியல் படிக்கும் லிவி சராசரி இளைஞன்,எதிலும் நாட்டம் இல்லாது பெருவட்டரை தொல்லை என நினைக்கிறான்.திரேஸ் ஊதாரியாக,பெரும் குடிகாரனாக படிப்பை பாதியில் விட்டு யாவரின் வெறுப்பிற்கும் ஆளாகிறான்.ஆனால் திரேசின் மீது பொன்னு பெருவட்டருக்கு எப்பொழுதும் ஒரு தனி பிரியம் இருக்கின்றது.ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் யாவரும் ஒவ்வொரு குணம் கொண்டு,பணம் ஒன்றினையே குறிகோளாய் கொண்டு ஆடம்பர வாழ்வின் மிதப்பில் இறுதியில் யாவற்றையும் இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

இரவு பகல் பாராது உழைத்து சேர்ந்த பெருவட்டரின் சொத்து யாவும் அவரின் தலைமுறையினரால் ஒன்றும் இன்றி ஆகிறது.மூத்தோர் நமக்கு அளித்த செல்வம் அது பணமோ,நிலமோ,நல்ல குணநலன்களோ,குடும்ப மதிப்போ எதுவாயினும் அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்த்தும் இந்நாவலின் மொழியாடல் நாகர்கோவில் பகுதி தமிழ் நடையில் உள்ளது.இந்நாவல் முற்றிலும் ஒரு வித்தியாச வாசிப்பு அனுபவமே.

Monday, September 8, 2008

ஜெயகாந்தனின் "உன்னை போல் ஒருவன்" - விளிம்பு நிலை வாழ்கையின் பதிவு

ஒருபுறம் அறிவியல்,விஞ்ஞான வளர்ச்சி,கேளிக்கை விடுதிகள்,நவநாகரிக ஷாப்பிங் மால்கள் என பட்டணங்கள் பல்லிளித்தாலும் விளும்பு நிலை மக்களின் வாழ்கை தரமும் நிலையும் மாறாது நீடிப்பவை.அடித்தட்டு மக்களின் வாழ்வை கதையாக கையாண்டவர்கள் மிகச்சிலரே.அவர்களுள் மறுக்க முடியாத எழுத்தாளர் ஜெயகாந்தன்.அவரின் பல்வேறு சிறுகதைகளும்,நாவல்களும் சென்னையின் மாய முகமூடியை விலக்கி பாசாங்கு அற்ற பகட்டில்லாத நிஜ மனிதர்களை சுற்றி சுழல்பவை.

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய நூல்களுள் முக்கியமானது என கருதுவது ஜெயகாந்தனின் "உன்னை போல் ஒருவன்" நாவல்.இதை சிறுவர்களுக்கான நாவல் எனவும் வகைபடுத்தலாம்.குணத்தால்,அனுபவத்தால், செய்கைகளால் முதிர்ச்சி பெற்ற சிறுவர்கள் அவர்கள். ஊட்டசத்து உணவு,ஆங்கில பள்ளி கல்வி,விடுமுறை நாட்களின் கேளிக்கை கொண்டாட்டம்,கணினி,வீடியோ கேம் என வளரும் நடுத்தர/மேல்தட்டு குழந்தைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இச்சிறுவர்கள் வாழ்கையின் கரடு முரடான பாதைகளில் தொடர்ந்து பயணிப்பவர்கள்..அப்படி பட்ட சிறுவன் ஒருவனை பற்றியது இக்கதை.



தந்தை முகம் அறியாத பத்து வயது சிட்டி சித்தாள் வேலைக்கு செல்லும் தாய் தங்கத்திற்கு உதவியாய் பகலில் ஐஸ் விற்றும் இரவில் பாலகர் பள்ளி சென்று படித்தும் அவள் மனம் குளிர செய்கிறான்.இந்நிலையில் தங்கத்திற்கு கிளி ஜோசியம் பார்க்கும் மாணிக்கம் மீது பிரியம் வந்து அவனோடு தன் மீதி நாட்களை கழிக்க எண்ணுகிறாள்.சிறுவனான சிட்டியிடம் இது குறித்து கூறி அவன் சம்மதம் பெற காத்திருக்கும் தங்கத்திற்கு சிட்டியின் எதிர்ப்பும்,அவள் சற்றும் எதிர்பாராத அவன் கூறிய தடித்த வார்த்தைகளும் நிலை குலைய செய்கின்றன.சதேன புது உறவுகளை நம்மால் ஏற்று கொள்ள இயலாது அதிலும் தாய்க்கும்,தந்தைக்கும் மாற்று என்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று.தன் வெறுப்பை மௌனமாக காட்டி வெளியேறும் சிட்டியின் செய்கை சிறுவனுக்கானது அல்ல,அதற்கு ஜெயகாந்தன் கூறும் விளக்கம் மெய்யானது சிட்டி சுக வாழ்வு வாழும் மேல்தட்டு வர்க்கமோ,பணக்காரர்களாக துடிக்கும் நடுத்தர வர்க்கமோ அல்ல ஏழ்மையின் பிடியில் உள்ள இச்சிறுவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவர் கூறுவது முற்றிலும் சரியே.

ஒருவகையில் இந்நாவலும் "ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்" போல எல்லா கதைமாந்தர்களும் அவர் அவர் போக்கில் நல்லவர்களாய்,பிறர் மீது பிரியம் கொண்டவர்களாக உள்ளனர்.தங்கத்தின் இரண்டாவது கணவன் மாணிக்கம் மிக சாதுவாய்,அவள் மீதும்,சிட்டி மீது அன்பு கொண்டவனாய் இருக்கின்றான். தன்னால் சிட்டி தாயை பிரிய வேண்டாம் என எண்ணி தங்கத்திடம் சொல்லாது வீட்டை விட்டு வெளியேறுகிறான்.கர்பிணியான தங்கம் சித்தியையும்,கணவனையும் பிரிந்து அல்லல் கொண்டு பிரசவத்தின் பொழுது உயிர் நீக்கிறாள்.தாயின் அருமையை தன் முதலாளியின் மூலம் அறிந்து சிட்டி தன் தங்கையுடன் புதுவாழ்வை தொடங்குவதை கதை முடிகிறது.

கனத்த சோகத்தை தந்து முடியும் இந்நாவல் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு செய்தியை சொல்லுகிறது.என் வரையிலும் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல்களில் இது ஒன்று .

வெளியீடு : மீனாட்சி பதிபகத்தார்
விலை : 60 ரூபாய்

Wednesday, September 3, 2008

புதுமைபித்தனின் "விநாயக சதுர்த்தி" அனுபவ சிறுகதை

புதுமைபித்தனின் ஒவ்வொரு சிறுகதையும் எதோ ஒரு ஆச்சர்யத்தை தருவதாய் உள்ளது.விநாயகசதுர்த்தி எனும் அவரின் இச்சிறுகதை எழுதப்பட்ட ஆண்டு 1936.இன்று வாசிக்கும் பொழுது எந்த சமூக மாற்றமும்/இடரளும் வெளிபடா வண்ணம் கதை நகர்கிறது.இதில் மேலும் குறிப்பிடவேண்டிய ஒன்று,ஒரே கதையில் இரு வேறு நிகழ்வுகளை பதிவு செய்திருப்பது.

நாத்திகனான புதுமைப்பித்தனின் ஒரு விநாயக சதுர்த்தி நாளில் வீட்டில் நடக்கும் பூஜை ஏற்பாடுகளையும் முன்னொரு முறை தம் ஊரில் விநாயக சதுர்த்தி அன்று நடந்த நிகழ்ச்சியையும் குழப்பம் இன்றி ஒன்று சேர கூறும் இக்கதை,இறந்தகாலம்,நிகழ்காலம் என இருவேறு காலங்களில் நிகழ்கிறது.




விநாயகசதுர்த்திக்கென வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவதை பற்றி குறிப்பிடும் பொழுது,நம்புங்கள் காசு கொடுத்து வாங்கியது இம்மாவிலைகள் என குறிப்பிடுகிறார்.70 ஆண்டுகளுக்கு முன்னும் பட்டணங்களில் இதே நிலை..இதற்கு அவரே கொடுக்கும் நகைச்சுவை விளக்கம் "நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும் வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி, "டேய், இரண்டு மாங்குழை பறித்துப் போடுடா!" என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப் படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள்"

பூஜை காரியங்களில் தம் மனைவிக்கு உதவிக்கொண்டே தன் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினை பற்றியும் கூறுகிறார்..நெல்லை குறித்த புதுமைபித்தனின் வர்ணனை பின் வருமாறு "அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சின்ன மண்டபம், சுப்பிரமணியசாமி கோவில், சாலைத் தெரு, பேராச்சி கோவில், மாந்தோப்பு, பனை விடலிகள், எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றலாயின"

துடுக்கான இளைஞன் ஒருவன் தான் செய்து வைத்த விநாயகர் சிலையை கும்பினியர் (ஆங்கிலேயர்) தூக்கி செல்ல அவர்களின் இடம் புகுந்து அச்சிலையை கைப்பற்றி பின் தப்பிக்க வழியின்றி கிணற்றில் விழுந்த கதையை நகைச்சுவை கலந்து விவரிக்கிறார்.நாத்திக கொள்கை கொண்டிருந்தாலும் கடவுள் நம்பிக்கை கொண்ட தம்மனைவியை கேலியோ,கிண்டலோ செய்யாது உற்சாகமாய் இறை பூசையில் அவர்களுக்கு உதவும் மனநிலை கொண்ட இந்த எழுத்தாளன் கதைகளில் மட்டும் இன்றி நிஜத்திலும் வித்தியாசமானவரே!!