Sunday, August 23, 2009

கந்தர்வனின் "கொம்பன்" - சிறுகதை தொகுப்பு

எழுத்தாளர் கந்தர்வன் குறித்த அறிமுகம் இதுவரை எனக்கில்லை.இவரின் இந்த சிறுகதை தொகுப்பு இவரின் பிற நூல்கள் குறித்து அறியும் ஆவலை அதிகரிக்க செய்வதாய் அமைந்துவிட்டது.இந்த தொகுப்பின் கதைகள் அனைத்தும் ஒரே வகை என சொல்லிவிட முடியாது.கிராமம்,நகரம் என கதைதளங்கள் மாறுகின்றன.இதில் "தண்ணீர்" சிறுகதையை படித்ததும் ஆகா இந்த கதை இவருடையதா என எப்பொழுதோ படித்து,நெகிழ்ந்ததை மீட்டு தந்தது.பல நடைமுறைகள்/விஷயங்கள் சென்ற தலைமுறையோடு அழிந்துவிட்டது..அதில் சில செவி வழி செய்தியாய் மட்டுமே இந்த தலைமுறைக்கு மிஞ்சி இருக்க..அடுத்த தலைமுறைக்கு அதுவும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே...கந்தர்வனின் கதைகள் முழுதும் இந்த ஆதங்கமே மேலோங்கி உள்ளது..

"கொம்பன்",மந்தை மாடுகள் ரெண்டு,உளவு மாடுகளாக ஆக்கபடுவதை வெகு அழகாய் சித்தரிக்கும் கதை.அந்திப்பொழுதில்,மேய்ச்சல் முடித்து ஊர் திரும்பும் மந்தை மாடுகள் கழுத்தின் மணியோசை தூரத்தில் ஒலிப்பதை, கேட்பதற்கு அற்புதமாய் இருக்குமென அப்பா சொல்லி கேட்ட பொழுது அந்த ஓசையை கற்பனை செய்து பார்க்கவே சுகமாய் இருந்தது.விருமாண்டி திரைப்படத்தில் ஒரு பாடலில் அழகாய் அவ்வோசையை இணைத்திருப்பர்.மந்தையில் கம்பீரமாய்,சுதந்திரமாய் திரிந்த மாடுகள் உழுவதற்கு ஏற்ப தயார் செய்யபடுவதை விரிவாய் பதிவு செய்கின்றது இக்கதை.


"கதை தேசம்",இந்த கதையை படிக்க தொடங்கிய பொழுது,என்ன ஒரு சம்பந்தம் அற்ற தலைப்பு என தோன்றியது..வாசிக்க வாசிக்க இதை விட வேறு தலைப்பேதும் பொருத்தமில்லை என தோன்றியதில் வியப்பில்லை.ராமேஸ்வரத்திற்கு நீங்கள் சென்றவர் என்றால் நன்கு புரியும்.வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் வடகத்தியர்களும்,அவர்களை மொய்க்கும் கைடுகளும்,ஊர் சுற்றி காட்டி உண்மையும் பொய்யுமாய் கதைகள் பலவற்றை தருவித்து பணம் சம்பாதிக்கும் அவர்களின் ஒரு நாள் பொழுதினை உடன் இருந்து பார்ப்பது போல இருக்கின்றது இக்கதையை வாசிக்கும் பொழுது.நான் இதுவரை படித்த சிறுகதைகளில் இக்கதை குறிப்பிடத்தக்கது.



"தண்ணீர்",முதல் பத்தியில் குறிப்பிட்டது போல வெகுவாய் கவர்ந்த கதை இது.தமிழக கிராமங்கள் பல குடிநீருக்கு படும்பாட்டை தினமும் ஊடகங்களில் படித்தும்,பார்த்தும் வருகின்றோம்.அப்படிப்பட்ட கிராமம் ஒன்றில் குடிநீருக்காக பெண்கள் பயணிகள் ரயிலில் ஏறி அடித்து பிடித்து தண்ணீர் பிடிப்பதை சோகமும் சிரிப்புமாய் சொல்லும் கதை."தெரியாமலே",அரசு அலுவலகம் ஒன்றின் தினசரி காட்சிகளை விவரிக்கும் இக்கதைகளம் எல்லா அலுவலகங்களுக்கும் பொருந்தும்.அலுவலக ஓய்வு நேரங்களில் கூடி கூடி சினிமா தொடங்கி அரசியல்,விளையாட்டு என பேசும் நண்பர்கள் கூட்டம் ஒன்று கிராமத்து கிழவர் ஒருவரிடம் சிறுமை பட்டுபோகும் காரியம் ஒன்றை நேர்த்தியாய் சொல்லும் கதை.

"அதிசயம்",விழுதூன்றி வளர்ந்த பனை மரம் ஒன்றை தன உடல் பலத்தால் சாய்க்கும் வீரன் ஒருவனின் கதை.பெரும் மரியாதையோடு கிராமத்தினரால் வரவேற்கபட்டு சாகச வீரனாய் தோன்றும் அவ்வீரன் பனை மரத்தை வேரோடு விழுதாட்டிய பிறகு அதற்கு தட்சணம் வேண்டி ஊரார் முன் கையேந்தும் காட்சி பல செய்திகள மறைமுகமாய் சொல்லி செல்கின்றது."மணியாடர்",பணத்தின் பொருட்டு ஏற்படும் பிரிவுகள் தவிர்க்க முடியாதவை.வெளியூருக்கு தம் குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோர்களின் மனவோட்டத்தை,பிள்ளைகள் அதை இயல்பாய் எடுத்து கொள்ளுவதையும் கிராமத்து பின்னணியில் சொல்லி உள்ளார்.

இவை தவிர்த்து "அவுரி","தலைவர்","யாரோ ஒருவர்","காளிப்புள்ளே" ஆகிய சிறுகதைகளும் இத்தொகுப்பில் உண்டு.நடைமுறையில் நாம் கவனிக்க தவறிய,கவனிக்க வேண்டிய சின்ன சின்ன காரியங்களை வெகு அழுத்தமாய் பதிவு செய்துள்ளார் கந்தர்வன்.அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பிது.

வெளியீடு - அகரம்(முதல் பதிப்பு)
விலை - 30 ரூபாய்

20 comments:

Unknown said...

நானும் கந்தர்வனை இதுவரை படித்ததில்லை. கண்டிப்பாக வாங்கி விடுகிறேன். பகிர்வுக்கு நன்றி லேகா.

லேகா said...

வருகைக்கு நன்றி பிரபு :-)

குப்பன்.யாஹூ said...

கந்தர்வன் பற்றி எஸ் ரா, மனுஷ்ய புத்திரன் கூறி உள்ளதை ஞாபகம்.

நன்கு கதைகளை படித்து அனுபவித்து எழுதி உள்ளீர்கள்.

உண்மையை சொல்வதானால் தமிழ் எழுத்தாளர்கள் தான் பாக்கியவான்கள். உங்களை போன்ற சிறந்த வாசகர்கள்தான் அவர்களுக்கு பெரிய ஊக்கம்.

உங்களின் பதிவு நாளைய தமிழ் தலைமுறைக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து என சொல்லுவேன்.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன்

ராம்ஜி_யாஹூ

லேகா said...

நன்றி ராம்ஜி..:-)

அ.மு.செய்யது said...

ப‌கிர்வுக்கு ந‌ன்றி லேகா !!!

ஒவ்வொரு ப‌திவையும் நீங்க‌ள் வெளியிடும் போதும்,அந்த‌ புத்த‌க‌ம் ப‌டிக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ம் த‌லை தூக்கும்.பூனாவில் இருப்ப‌தால், உயிர்மை,கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் த‌விர‌ ம‌ற்ற‌ எந்த‌ ப‌திப்ப‌க‌த்தின் புத்த‌க‌ங்க‌ளையும்
வாங்க‌ முடிய‌வில்லை.

ஏதேனும் வ‌ழியிருந்தால் தெரிய‌ப்ப‌டுத்துங்க‌ள்.

மாதவராஜ் said...

கந்தர்வனின் ‘பூவுக்குக் கீழே’ சிறுகதைத் தொகுப்பு, கொம்பனை விடவும் சிறப்பானது என்பது என் கருத்து. கந்தர்வனின் ‘சாசனம்’ கதைதான் மகேந்திரன் இயக்கிய கடைசி திரைப்படம். மிக நுட்பமான பார்வையும், அதை வெளிப்படுத்தக்கூடிய மொழியும் கொண்டவர். கந்தர்வனை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

Palaniraja said...

லேகாவுக்கு வணக்கங்கள்..
வெகு நாட்களுக்கு முன்பு உங்கள் வலை பக்கத்தை பற்றி நமது நிறுவனத்தின் forum ஒன்றில் படித்தேன்..

பல புத்தகங்களை படித்து, அதை எங்களுடன் பகிர்ந்தும் வருகிறீர்கள்!! நன்றி!!
உங்கள் தந்தைக்கு நன்றி, உங்களுக்கு புததங்களை அறிமுகம் செய்ததற்கு!!

லேகா said...

வருகைக்கு நன்றி செய்யது.

முன்பே கூறியது போல நான் வாசித்த புத்தகங்கள் பெரும்பாலும் அப்பாவால் வாங்கப்பட்டவை.அதில் அனேக புத்தகங்கள் தற்சமயம் கிடைப்பதில்லை என்றே நினைக்கின்றேன்.http://anyindian.com/ குறித்து அறிவீர்கள் என்று நினைக்கின்றேன்.நான் புத்தக சந்தையில் மொத்தமாய் வாங்குவதோடு சரி...சென்னையில் புத்தகங்கள் வாங்குவதி அரிது,புதுமைபித்தன்,சாரு,எஸ்.ரா,சுஜாதா,ஜெயகாந்தன் நூல்கள் மட்டுமே லாண்ட்மார்க் போன்ற இடங்களில் கிடைக்கின்றது.

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி மாதவராஜ்,

நேற்று தான் எஸ்.ரா வின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசையில் கந்தர்வனின் "சாசனம்" இருப்பதை பார்த்தேன்.படிக்கச வேண்டிய நூல்கள் வரிசையில் "பூவுக்கு கீழே" தொகுப்பை குறித்து கொள்கின்றேன்.

மிக்க நன்றி

லேகா said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பழனி :-)

கே.என்.சிவராமன் said...

லேகா,

'டெம்ப்ளேட்' விமர்சனமாக அமையும் என்பதால், 'நல்லா இருக்கு' என சொல்லாமல் விடுகிறேன். தொகுப்பு நூல்களை குறித்து அறிமுகம் செய்யும் அதேநேரம், உங்கள் அனுபவம் சார்ந்த இடுகைகளையும் அவ்வப்போது நீங்கள் எழுத வேண்டும் என்பது ஆசை.

@ அன்பின் செய்யது,

பூனாவில் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். லேகா குறிப்பிட்டுள்ளது போல் 'எனி இந்தியனில்' முயற்சி செய்யுங்கள். அல்லது சென்னையிலுள்ள 'நியூ புக் லேண்டை' தொலைபேசி வழியே தொடர்பு கொள்ளுங்கள். 044 - 28156006. (காலை 11 மணி முதல் மாலை 7. 30 மணி வரை)அங்கு சீனிவாசன் என்பவர் இருப்பார். அவர் இல்லாவிட்டாலும், இருப்பவர்களிடம் உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை பட்டியலிடுங்கள். பணத்தை அனுப்ப வேண்டிய வழிமுறைகளை அவர்களே சொல்வார்கள். பத்திரமாக புத்தகங்கள் உங்களை வந்தடையும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜீவி said...

//நடைமுறையில் நாம் கவனிக்க தவறிய,கவனிக்க வேண்டிய சின்ன சின்ன காரியங்களை வெகு அழுத்தமாய் பதிவு செய்துள்ளார் கந்தர்வன்.//

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
இதுவே, கந்தர்வன் அவர்களின் பார்வை தீட்சண்யமும், அவர் பார்த்ததை நம்மையும் பார்த்து ரசிக்கச் சொல்லும் சேதியாகும்.

லேகா said...

நன்றி சிவராமன்.

அனுபவம் சார்ந்த பதிவுகள் எழுத எனக்கும் விருப்பம் தான்.அனுபவங்கள் கிட்ட கிட்ட எழுத முயற்சிக்கின்றேன்..நெல்லை பயணம் தான் தவறிக்கொண்டே இருக்கின்றது..விரைவில் சென்று வந்து அது குறித்து பதிவு செய்கின்றேன்.

நியூ புக் லேண்டை குறித்த அறிமுகத்திற்கு நன்றி.

லேகா said...

வருகைக்கு மிக்க நன்றி ஜீவி :-)

குப்பன்.யாஹூ said...

Before Nellai, could you please write more about Madurai, madurai experiences.

Because for Nellai we have so many writers starting from barathi, vanna nilavan, vanna daasan, tikasi,

அ.மு.செய்யது said...

நன்றி லேகா..எனி இந்தியனில் நிறைய புத்தகங்களை காண முடிகிறது.

நன்றி பைத்தியக்காரன் சார். நியூ புக் லேண்டின் எண்ணை குறித்து வைத்து கொண்டேன்.

Krishnan said...

கந்தர்வன் எழுத்துக்களை இதுவரை படித்ததில்லை, படிக்க தூண்டுகிறது தங்கள் மதிப்புரை. நன்றிகள் பல லேகா.

லேகா said...

@ ராம்ஜி

நிச்சயமாய் மதுரை குறித்து பதிவு செய்கின்றேன்.

லேகா said...

நன்றி கிருஷ்ணன்

RAGUNATHAN said...

கதை தேசம் என்ற கந்தர்வன் கதையை எங்கோ படித்திருக்கிறேன். முழுத் தொகுப்பும் வாங்க வாய்ப்பு இருந்தும் வாங்கவில்லை. உங்கள் விமர்சனம் வாங்கி படிக்கத் தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி லேகா :)