Saturday, September 5, 2009

கண்மணி குணசேகரனின் "ஆதண்டார் கோவில் குதிரை"

"இந்த மண்ணை,மக்களை,மொழியை,முந்திரிகளை விட்டு விட்டு எங்கேயோ ஒரு நகர காட்டுக்குள் அடைபட்டு,உயிரற்றவர்களை எழுத நேர்த்திடாதவாறு ஓர் எதிர்காலம் எனக்கு வாய்க்குமானால்,அது போதும் எனக்கு."

-- கண்மணி குணசேகரன்

முந்திரி காடுகளும் அதன் புழுதியில் தோய்ந்த மனிதர்களுமே கண்மணி குணசேகரனின் கதைகளில் பிரதானம்.சமீபத்தில் வாசித்த மிக சிறந்த புத்தகம் இது.மண்ணோடு கலந்த கதைகள் நெருக்கமானதொரு உணர்வை தரவல்லவை.ஒவ்வொரு கதையிலும் ஒரு கதாபாத்திரம் நம் மனதை தொட்டு செல்வதாய் உள்ளது..பெண்கள்,காதல்,தொழில் நிர்பந்தங்கள்,தலைமுறை இடைவெளி,கடவுள் நம்பிக்கை என பொதுவான விஷயங்களை முற்றிலும் புதிதாய் சொல்லி செல்கின்றன இக்கதைகள்.முந்திரி காடுகள் குறித்து அறிமுகம் எனக்கு இருந்ததில்லை,சேலம் - தருமபுரி இடையே உள்ள கிராமங்கள் பல இந்த முந்திரி காடுகளை கொண்டே பிழைக்கின்றன என அப்பா சொல்லி அறிந்தேன்.

"பால் நரம்பு",குழந்தை பேறில்லாத சோலைச்சி பைத்தியம் ஆனா கதையை கனமான சோகத்தோடு விவரிக்கும் கதை.மனநிலை பாதிக்க பெற்றவர்கள் காணும் பொழுது மனம் இனம் புரியாத ஒரு கனத்தை கொண்டுவிடும்..கோபியின் 'உள்ளே இருந்து சில குரல்கள்" படித்த பின் இவர்களின் மீதான பார்வை முற்றிலும் மாறி போனது."நினைப்பும் பிழைப்பும்",அடுத்த வீட்டு நிகழ்வுகளில் மூக்கை நுழைக்கும் வழக்கம் அநேகருக்கு அதிலும் முக்கியமாய் பெண்களுக்கு.



"ராசபாட்டை",கூத்து கலைஞர்கள் குறித்த பதிவுகள் மிக குறைவு.இந்த சிறுகதை எனக்கு எஸ்.ராவின் "கர்ண மோட்சம்" குறும்படத்தை நினைவூட்டியது.கூத்து நடத்திட கிராமம் ஒன்றிற்கு செல்லும் கூத்து கோஷ்டியினரின் சோக அனுபவங்களே இக்கதை."முறிவு",எலும்பு முறிவிற்கு நாட்டு வைத்தியம் செய்யும் முதியவர்,தலைமுறை இடைவெளியின் காரணமாய் உழலுவதை சொல்லும் கதை.

கூத்து,நாட்டு வைத்தியம் வரிசையில் இந்த தலைமுறையினர் அறியாத மற்றொரு தொழில் பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவது.ஒடுக்கு எடுக்க,ஈயம் பூச ஊர் ஊராய் திரியும் ஒரு தொழிலாளி நிரந்தரமாய் தங்கிட வீடு இன்றி தவிப்பதை வெகு இயல்பாய் சொல்லும் கதை 'தாய் வீடுகள்".சொந்த வீடு குறித்த ஏக்கத்தை அழகாய் பதிவு செய்கின்றது இக்கதை.மருதாணி வாசம் விரும்பாதவர்கள் யாரும் இல்லை.மருதாணி வாசம் முகர்ந்திட துடிக்கும் பண்ணை கூலி சிறுவன் ஒருவனின் ஏக்கத்தை சொல்லுவது "வாசம்".

கண்மணி குணசேகரனின் கதைகளில் அழிந்து வரும் கலைகள்,தொழில்கள் குறித்த கவலை அதிகம் தெரிகின்றது.அழிந்து வருவது கலைகள் மட்டும் அல்ல அந்த கலைஞர்களின் வாழ்கையும் தான்.தலைமுறை தலைமுறையாய் கூத்து கட்டியவர்கள் இன்று சினிமா பாட்டுக்கு நடனம் ஆடும் நிலைக்கு ஆளானது சமூகத்தின் அக்கறையின்மையாலேயே..எதையும் ஒதுக்கி விடமுடியாதபடி இத்தொகுப்பில் எல்லா சிறுகதைகளும் அர்த்தம் மிகுந்து ஏதோ ஒரு செய்தியை சொல்லுவதாகவே உள்ளது .

வெளியீடு - தமிழினி
விலை - 50 ரூபாய்

16 comments:

Unknown said...

நீங்கள் இணைத்துள்ள "மாடர்ன் ஆர்ட்" என்னுடைய மாமாவை ஞாபகப்படுத்தியது. அவர் வரையும் போது அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவர் வண்ணங்களுடன் விளையாடுவதைப் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும்.

/-- தலைமுறை தலைமுறையாய் கூத்து கட்டியவர்கள் இன்று சினிமா பாட்டுக்கு நடனம் ஆடும் நிலைக்கு ஆளானது சமூகத்தின் அக்கறையின்மையாலேயே. --/

நீங்கள் சொல்லுவது நிச்சயமாக உண்மை லேகா. மார்ஷல் ஆர்ட், கராடே, கும்ஃபு என்று ரசிப்பவர்கள் சிலம்பாட்டத்தை ரசிப்பார்களா என்றால் இல்லை. நம்முடைய அக்கறையின்மையினால் ஆகச்சிறந்த அனைத்தையுமே இழந்து கொண்டிருக்கிறோம்.

உதாரணமாக, கேணி இலக்கிய சந்திப்பில் "வீடு" படத்தின் குறுந்தகடுகள் எங்கு கிடைக்கும்? என்று பாலு மகேந்திராவிடம் கேட்டார்கள்.

"தேடினாலும் கிடைக்காது... நெகட்டிவ் எங்குமே இல்லை" என்றார்.

RAGUNATHAN said...

//பெண்கள்,காதல்,தொழில் நிர்பந்தங்கள்,தலைமுறை இடைவெளி,கடவுள் நம்பிக்கை என பொதுவான விஷயங்களை முற்றிலும் புதிதாய் சொல்லி செல்கின்றன இக்கதைகள்.//
மிகச் சரி. அதோடு நலிந்த தொழிலாளர்கள், மறுதலிக்கப்படும் தாழ்த்தப்பட்டோரின் உணர்வுகள், தொழில் ரீதியாக அவர்தம் சேவையை ஒரு எகத்தாளத்துடன் ஏற்கும் கிராமப்புற உயர்குடியின் சொல் வன்முறை, அதை எதிர்க்கும் அத்தொழிலாளியின் உணர்வுகளை கண்மணி குணசேகரன் பதிவு செய்துள்ளார் ஏவல் என்ற சிறுகதையில் (வெள்ளெருக்கு- தொகுப்பு)

நேசமித்ரன் said...

மிக நல்ல பகிர்வு
இனம் புரியாத வலியுடன் செல்கிறேன்

குப்பன்.யாஹூ said...

பதிவு அருமை லேகா.

நான் கண்மணி குணசேகரன் பற்றி அறிந்துள்ளேனே தவிர படித்தது இல்லை.

பகிர்தலுக்கு மிகுந்த நன்றி.

தங்களை பலதரப்பட்ட வாசிப்பு தொடரட்டும், வாழ்த்துக்கள்.

நானும் தருமபுரி, ஹோசூர் பக்கம் எல்லாம் அதிகம் போனது இல்லை, அந்த தேசத்து எழுத்தாளர்களையும் படித்தது இல்லை.

லேகா said...

நன்றி கிருஷ்ணன் பிரபு,

நான் கட்டுரைகளுக்கு புகைப்படம் இணைப்பதற்கு அதிக சிரமம் எடுத்து கொள்வேன்..வண்ணங்களின் கலவையில் நாம் விரும்பிய சித்திரங்களை தேடுவதே ஒரு சுவாரசியம் தான்.

கேணி சந்திப்பு குறித்த பகிர்ந்தலுக்கு நன்றி.

லேகா said...

நன்றி ரகுர்தாமன்.

வெள்ளெருக்கு தொகுப்பு குறித்து கேள்விபட்டுள்ளேன்.அவசியம் வாசிக்க முயல்கிறேன்.

லேகா said...

நன்றி ராம்ஜி.

கவனிக்க படவேண்டிய எழுத்தாளர் இவர்.கட்டுரை தொடக்கத்தில் கோடிட்டுள்ள வாசகங்களே இவரின் படைப்புகளுக்கு நல்லதொரு அறிமுகம்.

லேகா said...

நன்றி நேசமித்ரன்

லேகா said...

நன்றி நேசமித்ரன்

WordsBeyondBorders said...

Hi,
Kanmani Gunasekaran has produced these works against very heavy odds. His first novel (or short story collection) was apparently written on the back of calendar papers and then published.

His 'Anjalai' is an important work which has one of the strongest female characters written in Tamil.

He also brought out a very important lexicon a few months ago.

A writer who needs to be given more prominence.

Ajay

லேகா said...

அஜய்,

இலக்கியம் குறித்த உங்கள் பகிர்தல் எப்பொழுதும் ஆச்சர்யம் தருவதாய் உள்ளது.கண்மணி குணசேகரன் சமீபத்தில் தமிழ் அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளார் என அப்பா சொல்லி அறிந்திருந்தேன்.

இவரின் அஞ்சலி கதை குறித்த அறிமுகத்திற்கு நன்றி.தேடி படிக்க முயல்கின்றேன்.

குப்பன்.யாஹூ said...

Ajay- Books for Life

Thanks for your info.

I hope you could write lot about Tamil writings, writers, Wish to read your posts.

குப்பன்.யாஹூ said...

வலை பதிவு தொடர் பதிவிற்கு உங்களை அழைக்கிறேன்.

உங்களுக்கு பதிவு உலகம் அறிமுகம் ஆனது, உங்கள் படைப்பு குறித்த விபரம் அறிய ஆவலாய் உள்ளேன்.

Anonymous said...

லேகா,

தமிழிலக்கியப் பரப்பில் அஞ்சலை நாவல் முக்கியமான் ஒன்று. அதே சமயம் அதிகம் கவனிக்கப்படாததும் அதுவே. அதில் வரும் பெண் பாத்திரப் படைப்பு போன்ற வலிமையான ஒன்றை நான் இதுவரை வாசித்ததில்லை.

கருவாச்சி காவியம் இதற்கு உரை போடக் காணாதென்பது என் தனிப்பட்ட கருத்து.

வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுதி நல்ல வாசிப்பனுபவம் தரும்.

போக்குவரத்துக் கழகப் பணியாளர் இவர்.

லேகா said...

தொடர் பதிவு அழைப்பிற்கு நன்றி ராம்ஜி.அய்யனாரும் அழைத்திருக்கின்றார்.

விரைவில் பதிப்பிக்கின்றேன்.

நன்றி.

லேகா said...

@ வடகரை வேலன்..

அஞ்சலை குறித்த ஆறுமுகத்திற்கு நன்றி.இங்கே நண்பர்கள் பலரும் அஞ்சலை குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள்,வாசிக்க ஆவலாய் உள்ளது.

கருவாச்சி காவியம்...கொஞ்சம் ஏமாற்றத்தை தந்த நாவல் அது.வாசகனை முழுதுமாய் சோகத்தில் ஆழ்த்தும் நோக்கில் ஒவ்வொரு பகுதியும் அமைந்திருந்தது மிகுந்த அயர்ச்சியை தந்தது..