Wednesday, October 20, 2010

La Strada..சபிக்கப்பட்ட காதலியின் கதை

ஜெல்சொமினா,அவள் ஒன்றும் வசீகரமானவள் இல்லை.குள்ளமான உருவம்,கோமாளியை நினைவூட்டும் நடை,ஆண்பிள்ளையை போன்ற தோற்றம்.....இருப்பினும் துடுக்குத்தனமான செய்கைகளும்,அந்த கண்களில் தேங்கி நிற்கும் காதலும்,ஏக்கமும் பார்வையாளனுக்கு அவள் மீது காதலை வரச்செய்துவிடும்.ஜெல்சொமினாவாக நடித்துள்ள கிலியட்டா மசினாவின் அற்புத நடிப்பால் இப்படம் காவியம் ஆகின்றது.இவர் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எனக்கு சாவித்திரியை ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தார்,அதிலும் நவராத்திரி திரைப்படத்தில் பைத்தியம் போல பாவனை செய்யும் சாவித்திரியை.

நாடோடி வித்தைக்காரனான ஜாம்பினோவிடம் சொற்ப பணத்திற்காக விற்கப்படுகிறாள் ஜெல்சொமினா.மார்பை சுற்றி இரும்பு சங்கிலி கட்டி அதை தன் பலம் கொண்டு அறுத்தெறியும் வித்தை செய்யும் ஜாம்பினோ முரடன்,குடிகாரன்,பெண் பித்தன்.ஜெல்சொமினாவிடம் எந்த ஒரு சந்தர்பத்திலும் அவன் பிரியத்தை காட்டியதில்லை.தொடக்கம் முதல் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் பாவத்திற்குரிய பெண்ணாக கிலியட்டா மசினாவின் நடிப்பு அட்டகாசம்.அவரின் தனித்துவ நடிப்பிற்கு உதாரணமென பல காட்சிகளை குறிப்பிடலாம்.வித்தையின் பொழுது மத்தளம் அடிக்க ஜெல்சொமினாவிற்கு ஜாம்பினோ கற்று கொடுக்கும் காட்சி சிறந்த உதாரணம்,சிறு குழந்தைக்கான உற்சாகத்தோடு அவள் அதை பழக முயல்வதும்,அவனோ அவளை குச்சியால் அடித்து சொல்லி தர,அதை எதிர்பாராத அவளின் முக பாவம்.




ஜாம்பினோ அவளை ஒரு உணவு விடுதிக்கு அழைத்து செல்லும் பொழுது அந்த முகத்தில் தோன்றும் ஆவலும் பெருமிதமும்..அவனோ அவளை பொருட்டென மதிக்காமல் அவளை தனியே விட்டுவிட்டு ஒரு வேசியோடு இரவை கழிக்க சென்றுவிடுகிறான்.இரவெலாம் உறங்காமல் அவனிற்காக காத்திருக்கும் ஜெல்சொமினா,காலையில் அவன் இருப்பிடம் அடைந்து, உறங்கி போயிருக்கும் அவன் அருகில்..தான் கண்டெடுத்த தக்காளி விதைகளை உற்சாகமாய் நட்டு கொண்டிருக்கின்றாள்.அற்புத நாடகம் ஒன்றின் உணர்வுபூர்வமான காட்சி போல..ஏமாற்றத்தை,கோபத்தை,வஞ்சிக்க பட்டதை மறக்க முயல்வதை அல்லது மறந்து விட்டதை உணர்த்துவதான காட்சி.

தொடர்ந்து ஜாம்பினோ தன்னை புறக்கணிப்பதை பொருத்து கொள்ள இயலாமல் ஜெல்சினோ ஓர் இரவு அவனை விடுத்து ஓடி வெகு தூரம் வந்து ஒரு நகரை அடைகிறாள்.அங்கு உயரமான கட்டடங்களுக்கிடையே கம்பியை கட்டி,அதில் நடக்கும் மட்டோவின் சாகச நிகழ்ச்சியை ஆச்சர்யத்தோடு காண்கிறாள்.அவளை தேடி வரும் ஜாம்பினோவிடம் தப்பிக்க முடியாமல் மீண்டும் அவனுடன் செல்கிறாள்.இம்முறை ஒரு சர்கஸ் கூட்டத்தோடு இணைந்து செயல் பட அவன் முடிவு செய்கின்றான்.அங்கு மட்டோவும் இருக்கின்றான்..அவளின் பிரியத்திற்குரிய ட்ரம்பட் கருவியை இசைக்க கற்று தருகின்றான் மட்டோ.கோமாளித்தனங்கள் மிஞ்சிய மட்டோ கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் ஜாம்பினோவை கிண்டல் செய்து கொண்டே இருக்கின்றான்.இவனின் சீண்டல் ஒரு நாள் கைகலப்பில் முடிய ஜாம்பினோ சிறை செல்கின்றான்.

அன்றிரவு ஜெல்சொமினாவும் மட்டோவும் கொள்ளும் உரையாடல் முக்கியமானது.ஜாம்பினோவிற்கு அவள் மீது பிரியம் உண்டு என்பதை அவள் மனதில் அழுத்தமாக பதிய வைக்கின்றான்..வாழ்வதற்கு எல்லோருக்கும் ஒரு காரணம் உண்டு.கூழாங்கற்களுக்கு கூட என அவன் பேசி கொண்டே போக...ஜெல்சொமினா ஜாம்பினோவுடன் தொடர்ந்து இருக்க முடிவு செய்கின்றாள்.சிறை இருந்து திரும்பிய ஜாம்பினோ அவளை அழைத்து கொண்டு வேறு நகரத்திற்கு செல்கின்றான்..பயணத்தில் ஊடே அவர்கள் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் தங்க நேரிடுகிறது.அன்றிரவு அவனிடம் தன் காதலை சொல்லுகின்றாள்.அதற்கும் அவனிடம் கோபமும்,எரிச்சலுமே பதிலாய் இருக்கின்றது.அங்கிருக்கும் கன்னிகாஸ்திரிகள் முன்பு அற்புதமாய் ட்ரம்பட் வாசித்து காட்டும் ஜெல்சொமினாவை முதல் முறையாக ஜாம்பினோ ஆச்சர்யமாய் பார்க்கின்றான்.




தொடரும் அவர்கள் பயணத்தின் பொழுது மட்டோவை சந்திக்க நேரிடுகிறது.ஜாம்பினோ அவன் மீது கொண்ட கோபத்தில் ஓங்கி அடித்துவிட மட்டோ இறந்து விடுகிறான்.சற்றும் இதை எதிர்பாராத ஜாம்பினோ யாரும் அற்ற அந்த சாலையின் ஓரத்திலேயே அவன் உடலை அப்புறபடுத்தி விட்டு பயணத்தை தொடர்கிறான்.மிரண்ட விழிகள் கொண்டு நிற்கும் காட்சியில் கிலியட்டாவின் நடிப்பு நேர்த்தி.மிட்டாவின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து கொஞ்சமும் மீள முடியாமல் ஜெல்சொமினா தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகிறாள்.மிட்டா உடனான உரையாடலில் அவன் கூறியதையே திரும்ப திரும்ப கூறி பிதற்றும் அவளால் எங்கே தான் மாட்டி கொள்ள நேரிடுமோ என்று ஜாம்பினோவிற்கு பயம் வந்துவிடுகின்றது.

ஓய்வெடுக்க ஒதுங்கிய சாலையோரம், அவள் புலம்பி கொண்டே உறங்கி போக.ஜாம்பினோ அவளை தனியே விட்டு விட்டு செல்கின்றான்.சொல்லவியலா துக்கத்தை தாங்கியபடி உறங்கி போகும் ஜெல்சொமினாவை கடைசியாய் நாம் பார்ப்பதும் அப்பொழுது தான்.மனதை கிழிக்கும் சூனியமான நிசப்தத்தை போன்றதொரு காட்சி அது.சில வருடங்கள் கழித்து..கடற்கரை சாலை வழி நடந்து செல்லும் ஜாம்பினோ ஜெல்சொமின இசைக்கும் அதே பாடலை கேட்கின்றான்..அப்பாடலை பாடிய பெண்ணின் மூலம் ஜெல்சொமினா பைத்தியமாய் திரிந்து இறந்து போனதை அறிந்து கொள்கின்றான். குற்ற உணர்ச்சி பீடிக்க பெற்று..கடற்கரையில் அலையும் ஜாம்பினோ,சோகம் தாளாமல் பெருங்குரல் எடுத்து அழுவதோடு படம் முடிகின்றது.

கிலியட்ட மசினாவின் நடிப்பிற்கு அடுத்த படியாய் ஜாம்பினோவாக நடித்துள்ள அந்தோணி கொயினின் நடிப்பு குறிப்பிடும்படியானது.ஊருராய் சுற்றி அலையும் ஜிப்சியிடம் அதீத பிரியத்தையோ,காதலையோ எதிர் பார்க்க முடியாது.சலிப்பு தரும் தனது அன்றாடங்களில் இருந்து விடு பட அவன் உணர்ச்சியற்ற நிலையை தேர்ந்தெடுப்பதாய் தோன்றியது.கச்சிதமான நடிப்பு இவருடையது.காதலை யாசித்து நிற்கும் அபலை பெண் ஜெல்சொமினாவாய் கிலியட்டா மசினா,எந்த ஒரு காட்சியிலும் கவனம் இவரை விட்டு அகலவில்லை. பார்வையாளன் ஜெல்சொமின மீது கொள்ளும் காதலும்,பரிதாபமும் இவரின் தனித்துவமான நடிப்பால் மட்டுமே சாத்தியமாகின்றது.

Monday, October 18, 2010

பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்"

சுயசரிதை எழுத்திற்கு ஒளிவு மறைவு இருத்தல் கூடாது என்று அ.முத்துலிங்கம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருப்பார்.அவ்வாறான எழுத்தே வாசகனுக்கு நம்பதன்மையையும், எழுத்தாளன் கூட்டி செல்லும் உலகத்தினுள் அந்நியோனியமாய் உலவும் ஆற்றல் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.மலையாள கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்" அவ்வாறான சுயசரிதை.புதைந்து போன இசை கருவிகளை தோண்டி எடுக்கும் மனநிலை எவ்வாறிருக்கும்?!மீண்டும் அதன் இசையை கேட்க எழும் ஆர்வம்,கிடைக்காமல் போனால் அடைய நேரிடும் ஏமாற்றம்,ஏற்கனவே அது தந்து போன இசை மயக்கம் என்பது போன்ற கலவையானதொரு மனநிலைக்கு இட்டு செல்லுகின்றது இந்த தொகுப்பு.

வறுமையின் பிடியில் சிக்கி பரதேசியாய் அலைந்த காலம் தொடங்கி நோபல் அரங்கம் சென்றது வரை, வெவ்வேறு சந்தர்பங்களில் தான் சந்தித்த மனிதர்கள் குறித்த ஒரு கவிஞனின் நேர்த்தியான சுயசரிதை இது.வாசிக்க வாசிக்க ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.வாசித்து முடித்ததும், இவர் வாழ்வின் எல்லா சம்பவங்களையும் பார்த்திருப்பாரோ என தோன்றியது.தனது வாழ்வனுபவங்களை கொஞ்சமும் கூட்டாமல், குறைக்காமல் வாசகனுக்கு அப்படியே தந்திருக்கின்றார்.



இந்நூலில் இவர் பகிர்ந்திருக்கும் நினைவுகளில், ஆண்களை விட பெண்களே வசீகரமானவர்கள்.சாஹீனா,சூன்யமாகி போன வாழ்கையின் துரத்தலில் இருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்று தோற்றவள்.தீக்காயங்கள் கொண்டு விகாரமாய் தோற்றம் அளிக்கும் சஹீனாவை எதிர்பாராமல் ரயில் பயணத்தில் சந்திக்கும் பாலசந்திரன்,அவளோடான தனது கடந்த கால காதலை மீட்டெடுத்து பின் மெல்ல நிகழின் அதிர்வில் இருந்து விலகுவது நெகிழ்வான விவரிப்பு.

"கண் ஜாடையாலே பாவக்கடலின் சூழலில் ஆழ்த்தும்
பெண்கள் புழுவால் தின்னப்பட்டு உதிர்ந்துபோவார்கள்"


இவ்வரிகளுக்கு அட்சரமாய் பொருந்தி போகும் லைலா என்னும் பெண்ணோடான பாலாவின் உரையாடல்கள் கோபியின் டேபிள் டென்னிஸின் சிறு பகுதியை வாசித்தது போல இருந்தது.கடற்கரை மணலில் சாந்தம்மா என்னும் வேசியுடன் துயரத்தை பங்கிட்டு, பாடி கழித்த இரவு,சர்வதேச புத்தக சந்தை ஒன்றில் காந்தியின் "சத்திய சோதனை" புத்தகத்தை தேடி அலைந்த தென் ஆப்பிரிக்க மூதாட்டியுடனான உரையாடல்கள்,கண்களில் மின்னலிட்டு சிரிக்கும் ராதிகாவின் மீது மோகித்திருந்த நாட்கள் - தொடர்ச்சியான அவளின் மரணம், மருமகளின் கொடுமை தாளாது தினம் ஒரு வேஷம் கட்டி யாசித்து அலைந்த முதியவள் என எல்லாவிதமான பெண்களும் உலவுகின்றனர்.

சிவாஜியுடனான பாலச்சந்திரனின் சந்திப்பு ஏற்கனவே இலக்கிய இதழ்களில் வெளிவந்து பேசப்பட்ட கட்டுரை.அதி உன்னதமான எழுத்தாளனை கூட சிறு பிள்ளையின் ரசிக மனநிலைக்கு மாற்றிவிடும் மந்திரத்தை சினிமா கொண்டுள்ளது.சிவாஜியை அவர் வீட்டில் சந்தித்தது குறித்து அந்த நேரத்தின் ஆச்சர்யம் விலகாமல் பகிர்ந்துள்ளார்.கமலா தாஸ் உடனான சந்திப்பு கவிதை சார்ந்த உரையாடல்கள் பற்றி அல்லாது, அவரின் பிரியமும்,அக்கறையும் உள்ள தயாள குணத்தை பறைசாற்றுவதானது.

பிரியத்திற்குரிய நண்பன் ஒருவனை நீண்ட நாட்களுக்கு பிறகு பைத்தியகாரனாய் காண நேர்ந்த அவலமும்,பணம்-உறவுகளை துறந்து கடவுளின் சந்நிதியில் முழுதுமாய் தங்களை அர்ப்பணித்து கொண்ட தம்பதியரை கண்டு நெகிழ்ந்த சந்தோஷ தருணமும் பாலச்சந்திரனுக்கு அமைந்திருக்கின்றது.ரத்த வங்கியில் மோசமானதொரு சூழ்நிலையில் நண்பன் ஆகி போன கிருஷ்ணன் குட்டி,தரித்திரத்தின் பிடியில் இருந்து விலக முடியாத அற்புத கவிஞன் ஸ்ரீவத்ஸன் என பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தி செல்லும் ஒவ்வொரு மனிதரும் நமக்காய் பெருங்கதை ஒன்றை வைத்திருக்கின்றார்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பு - கே.வி.ஷைலஜா
வெளியீடு - காவ்யா (2002 )

Sunday, October 10, 2010

இயல்பின் அழகை மீட்டெடுக்கும் வண்ணதாசனின் கதையுலகம்....



"ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பிடித்த பட்டுப்பூச்சியை,அதை பிடித்த நேரத்தின் சந்தோஷத்தோடு உங்கள் கையில் அல்லது என் மிக அருகில் எதிர்படுகிற மனிதனின் உள்ளங்கைக்கு மாற்றிவிட்டால் போதும்."

-- வண்ணதாசன்



தேர்ந்த ஓவியனின் சித்திரங்களை போலவே வண்ணதாசனின் கதை மாந்தர்களும். இவ்வோவியங்கள் கால ஓட்டத்தில் தொலைத்த உறவுகளை/நினைவுகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.ஓவியத்தில் ஒளிந்திருப்பது தொலைத்த நட்பாகவோ.. மறக்கவியலா காதலியாகவோ....கண்டதும் கைபிடித்து கொள்ளும்,எங்கோ தூரத்து சிறுநகரில் வசிக்கும் சித்தப்பாவாகவோ,மதினியாகவோ இருக்கலாம். நினைவில் புதைந்து கிடந்த சில முகங்களை மீண்டும் காண வேண்டும் என்கிற ஆவலை கிளறிவிட்ட எதார்த்த ஓவியங்கள் தனுவும், சின்னுவும்,லீலாக்காவும்,சிறு மலரும்....கடல் மணலில் கால் புதைத்து சிப்பிகளை தேடி அலையும் சிறுமியின் மனநிலையில் வந்து விடுகின்றது வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் பொழுது.


வண்ணதாசனின் சமீபத்திய தொகுப்பான "பெய்தலும் ஓய்தலும்" வாசித்து முடித்ததும்,"சின்னு முதல் சின்னு வரை" வாசிக்க வேண்டும் போல இருந்தது.மிகப்பிடித்த குறுநாவல் அது.சின்னு குறித்து மிகவும் குறைவாகவே தெரிவிக்கபட்டிருக்கும்,முற்று பெறாத கவிதையை தந்து இஷ்ட சொற்கள் கொண்டு முழுமைபடுத்திக்கொள் என விட்டுவிடுவது போல.இந்நாவல் பேசுவதெல்லாம் குறுகி வரும் மனித மனப்பான்மைகள் குறித்து!கணவனை இழந்த சின்னு,அவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டிருப்பதை,சகிக்க முடியாத குற்றமென கொள்ளும் பொதுப்பார்வையை முன்வைத்து பின்னபட்டிருக்கும் கதை.நெற்றியில் விழும் சுருள் முடியை ஒதுக்கியபடி சின்னு அழகாய் சிரித்து கொண்டிருந்தாள் என்பதான முதல் வர்ணனையே இப்போதும் சின்னு குறித்து யோசித்தால் நினைவிற்கு வருகின்றது...!

இந்நாவலை முதல்முதல் வாசித்தது ஒரு வேனிற்கால பகலில்.பொதுவான கற்பிதங்களுக்கு பழகி போய்விட்ட மனிதமனங்கள் அத்தகைய பொழுதொன்றின் புழுக்கத்திற்கு ஒப்பானவையே.

'நகரத்திற்கு வெளியே கொஞ்சம் சொர்க்கம்' சிறுகதையின் நாயகன் தாஸ்,அலுவலகத்தில் மின்விசிறி கொஞ்ச நேரம் இயங்காவிட்டாலும் கூப்பாடு போடும் தாஸ் குறித்த தொடர் விவரிப்புகள் சுவாரஸ்யத்தை மீறிய எதார்த்தங்கள்...நைந்து போன விசிறியோடு இரவு வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் தாஸ் போன்றவர்களை நிச்சயம் ஒருமுறையேனும் சந்தித்திராமல் இருந்திருக்க முடியாது.வீட்டில் நிலைமை தலைகீழாய் இருக்க,பொது இடங்களில் வேறுவிதமாய் வெளிக்காட்டி கொள்ளும் இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல மாறாக இயல்பே அதுவென சிறு புன்னகையோடு கடந்து செல்ல வேண்டியவர்கள்.

தனுவை குறித்து இன்னும் என்ன பேச?!!மௌனியாய் இருந்து கொண்டே அவனுள் காதல் வளர்க்கும் அந்த சிறுபெண்ணை குறித்து யோசித்தால்..மழை நனைத்த சாலையும்..வாதாம் மரங்களுமே முன்வருகின்றன."தனியாகி..தனுவாகி.." என அவனோடு சேர்ந்து கரைந்து போக செய்பவள்.நடுகையில் வரும் அந்த கிழவர்,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லியை போன்றதொரு பாத்திர படைப்பு.அவரின் தர்க்கங்கள்.. செடிகள் மீதான தீராக்காதல்..."ஒண்ணை பிடிங்கினால் ஒண்ணை நடணும் .." என கூறும் இடத்தில் பிடுங்கி எறியப்பட்ட துளசி வாசனை.


"கூடு விட்டு" கதையில் வரும் லீலாக்கா, "அதெப்படி மறக்கும்,நீங்க சொன்னதை ஒரு சொட்டு விடாமல் உரை ஊற்றியில்லா வச்சிருக்கேன்" என்கிறாள் ஒரு இடத்தில்.."கையில் கோலப்பொடி இருக்கு,இல்லாட்டி உன் வண்டி ஹார்ன் சத்தத்தை பந்தை பிடிப்பது போல ரெண்டு கையிலயும் பிடித்து இருப்பேன்" என்கிறாள் வேறொரு சந்தர்ப்பத்தில்."கோபம்னா அப்படி ஒரு கோபம் எனக்கு..சில்லு சில்லா தெரிச்சு பட்டாசலைல கிடக்கு.நீ வந்திருந்தா உன் காலில் பூந்திருக்கும்" என்பவளை எதனோடு ஒப்பிடுவது..


"இந்த சாதாரண வாழ்வின் மத்தியில் காதல் தான் சில
தேவதை கதைகளை சொல்லி செல்கிறது"


"ஒரு முயல் குட்டி இரண்டு தேநீர் கோப்பைகள்" கதையில் வரும் சிறுமலர் அப்படி ஒரு தேவதையே.நட்பின் எல்லை எதுவென தீர்மானிக்க முடியாத நிலையில் நிகழும் சங்கடங்களை மெலிதாக அணுகி இருக்கும் இக்கதை கோபியின் சிறுகதை ஒன்றை நினைவூட்டியது.'உப்பு கரிக்கிற சிறகுகள்' கதையில் வரும் செல்வி,எல்லா கடல் மீதும் பறந்து விட்டு உப்பு கரிக்கும் சிறகோடு ஓய்வெடுக்க வரும் பறவையோடு தன்னை ஒப்பிட்டு கொள்கின்றாள்.சபிக்கப்பட்ட காதலி தேவதையாய் உருமாறும் கதை.

வண்ணதாசன் கைமாற்றி விட்டிருக்கும் பட்டுப்பூச்சிகள் இன்னும் எத்தனையோ..பொலிவற்ற நகர ஓட்டத்தின்,பதற்றம் நிரம்பிய முகங்களுக்கு மத்தியில் இந்த பட்டுபூச்சிகளின் தேவை அவசியமானது என்பதில் சந்தேகமில்லை..


சின்னு முதல் சின்னு வரை - விமலன் புக்ஸ் வெளியீடு(1991 )
வண்ணதாசன் கதைகள் - புதுமைப்பித்தன் பதிப்பகம்
பெய்தலும் ஓய்தலும் - சந்தியா பதிப்பகம்