Friday, September 2, 2016

Mustang



துருக்கி இயக்குநர் Deniz Gamze Ergüven'ன் #Mustang பெண் விடுதலையை முன்வைத்து ஐந்து சகோதரிகளின் கதையை பகிர்கின்றது. பெண்களுக்கான சுதந்திர வெளி முற்றிலும் ஒடுக்கப்பட்ட தேசத்தில் இருந்து வந்திருக்கும் துணிச்சல் மிகுந்த படைப்பிது.துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் பனி நாவலில் பேசப்படும் முக்காடு பெண்கள் குறித்த காரியங்கள் இப்படம் பார்க்கையில் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை. ஒரு கோணத்தில் பனி நாவலின் நவீன பிரதியாகவே இத்திரைப்படம் காட்சியளிக்கிறது

நகரத்தில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட கிராமம் ஒன்றில் பாட்டியுடன் வசிக்கும் ஐந்து சகோதரிகள்.சிரிப்பும் ,கேலி விளையாட்டுமாய் அவர்கள் அறிமுகம் ஆகும் காட்சி அப்பெண்களின் விருப்ப வாழ்வின் ஒரு துளி.அதன் தொடர்ச்சியாய் நிகழ்பவை யாவும் சீழ் பிடித்த சமூகத்தின் கோர முகத்தை பறைசாற்றுபவை.ஒழுக்க நெறிகள் என பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட அற்ப விஷயங்களுக்காய் அவர்கள் முற்றிலுமாய் வீட்டினுள் சிறை வைக்கப் படுகிறார்கள்.அச்சிறையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரே தீர்வு திருமணம்.அது சிறை மாற்றம் மட்டுமே என்பதை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளவும் செய்கின்றனர்.

உடைகளில் துவங்கும் ஒடுக்குமுறை வீட்டு வேலைகளுக்கு அப்பெண்களை தயார்படுத்துவது, கன்னித் தன்மையை மருத்துவரிடம் சோதனை செய்வது,கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்துவது என நீள்கிறது.பாலியல் ரீதியிலான அடக்குமுறை இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.நீச்சல் உடையில் இல்லாத குளத்தை கற்பனை செய்துகொண்டு அச்சிறுமிகள் தரையில் விழுந்து நீந்தும் காட்சி அவர்களின் கையறு நிலையைச் சொல்ல போதுமானது. ஐந்து சகோதரிகளில் நம் கவனத்தை ஈர்ப்பது கடைசி பெண்ணாக நடித்துள்ள Günes Sensoy.துணிச்சல்காரியாக அவரது தீர்க்கமான நடிப்பு நம்மை ஆச்சர்யப்படுத்துவது.

கற்பு நிலை சார்ந்த கோட்பாடுகள் பெண்களுக்கு மட்டுமே என்றான சமூகத்தில் உளவியல் ரீதியிலாக பாதிக்கப்படும் அப்பெண்கள் எவ்விதம் தங்களை அச்சூழலில் இருந்து விடுவித்துக் கொள்கின்றனர் என்பதை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். அவர்களுள் சமூகத்தை எதிர்த்து நிற்க துணிந்தவர்களே உண்மையான வெற்றியை பெறுகின்றனர்.நவீன உலகில் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்றும் சில அடக்குமுறை சமூகங்கள் தம் பெண்களை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது இப்படைப்பு.

Guardian இதழுக்கு இயக்குனர் டெனீஸ் அளித்துள்ள விரிவான நேர்காணல் இத்திரைப்படம் குறித்த பல்வேறு புரிதல்களை தெளிவுபடுத்துகின்றது. தைரியமாக தன கருத்துக்களை பதிவு செய்ததற்கு பலனாக இனி துருக்கியில் தொடர்ந்து படங்கள் செய்ய முடியாத நிலை இயக்குநருக்கு. எப்படி பட்ட அடக்குவாத சமூகத்தில் இருந்து அவரது புரட்சிகர குரல் வெளிப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.

ஆணாதிக்க சமூகத்தின் பிடியில் இருந்து வெளிவர புத்தி சாதுர்யமும் மிகுந்த துணிச்சலும் பெண்களுக்கு அவசியம் என்பதை எதார்த்த மொழியில் ரசிக்கும்படி சொல்லியுள்ள இப்பெண்ணிய படைப்பு எளிய கதை சொல்லல் வழி மாபெரும் பேருண்மையை உரத்துப் சொல்கிறது.

No comments: